www.asiriyar.net

Monday 4 September 2017

412 இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்படும்: கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் 412 இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


  ஈரோட்டில் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சனிக்கிழமை ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவி அனிதாவின் தற்கொலை வேதனையளிக்கிறது. மாணவர்கள் இதுபோன்ற செயலில் இனி ஈடுபடக்கூடாது. போட்டித் தேர்வுகளை மாணவர்கள் தயக்கமின்றி எதிர்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் 412 இடங்களில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பயிற்சி மையங்கள் மூலம் எந்தவிதமான போட்டித் தேர்வுகளையும் எளிதில் மாணவர்களால் எதிர்கொள்ள முடியும் என்ற நிலை உருவாக்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், தற்போதுள்ள பாடத் திட்டங்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டங்களுக்கு இணையாக மாற்றியமைக்கப்பட உள்ளன. அப்படி மாற்றும்போது தமிழகத்தின் தொன்மை, கலாசாரம் போன்றவற்றில் மாற்றம் இருக்காது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஈரோட்டில் செப்டம்பர் 6-ஆம் தேதியன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கோரிக்கை விடுத்தார். நீட் தேர்வைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு தொடர்ந்து போராடியே வந்துள்ளது என்றார். முன்னதாக, ஈரோடு ஏஈடி பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான விழா மேடையை அமைச்சர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ.-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணியன், ஈஸ்வரன், ராஜாகிருஷ்ணன் உட்பட பலர் பார்வையிட்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில், ஆவின் நிறுவனத் தலைவர் பி.சி.ராமசாமி, பகுதிச் செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீசன், கே.சி.பழனிசாமி, மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment