www.asiriyar.net

Wednesday 8 November 2017

மழை விடுமுறை முடிவெடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு... அதிகாரம்!

மழை பாதித்த மாவட்டங்களில், பள்ளிகளை திறப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்க, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், ஒட்டுமொத்த மாவட்ட நிலவரத்தையும் அறிந்து, விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிக்க தேவையில்லை.
பாதிப்புக்கு ஏற்ப, பள்ளி தலைமையே முடிவு செய்து கொள்ள, கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, மழை நேரத்தில் பள்ளி உண்டா, இல்லையா என்ற, மாணவர்கள், பெற்றோர் குழப்பத்திற்கு விடிவு பிறந்துள்ளது.

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கிய முதல் வாரத்திலேயே, யாரும் எதிர்பார்க்காத வகையில், பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால், பள்ளிகளுக்கு, அக்.,30 முதல், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலை, சட்ட பல்கலை, சென்னை பல்கலையில், நவ., 3ம் தேதி மட்டும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில், சென்னையை மிரட்டிய கன மழை முடிவுக்கு வந்து, மிதமான மழையாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து, மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட, சில பள்ளிகளுக்கு மட்டும், விடுமுறை தொடர்கிறது. அங்கு, சீரமைப்பு பணி முடிந்ததும், பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி திறப்பை முடிவு செய்யும் அதிகாரம், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, மழை மற்றும் இயற்கை சீற்ற பிரச்னைகளின் போது,பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். பள்ளியை திறப்பதா, விடுமுறை விடுவதா என்பது குறித்து, உரிய காரணங்களுடன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தால் போதும். அவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.அதன்பின், எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை என்பதை, மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பாக வெளியிடுவர். அதற்கு முன், பள்ளிகள் உண்டா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள, மாணவர்களும், பெற்றோரும், 'டிவி' செய்தியை எதிர்பார்த்து காத்திருப்பதை தவிர்க்க, தலைமை ஆசிரியர்களே, குறுஞ்செய்தி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் குழப்பத்துக்கு, விடிவு கிடைத்துள்ளது.

முன் அரையாண்டு தேர்வு ரத்து

 சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த, முன் அரையாண்டு தேர்வுகள்ரத்து செய்யப்பட்டு உள்ளன.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை, பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற வைக்கும் முயற்சியாக, அரையாண்டு தேர்வுக்கு முன், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், இத்தேர்வு, வரும், 13ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.கன மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டது. முன் அரையாண்டு தேர்வில், காலாண்டு தேர்வுக்கான பாடங்கள் மற்றும் அதற்கு பின் நடத்திய பாடங்களையும், படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தொடர் விடுமுறையால், நவம்பர் வரை நடத்த வேண்டிய பாடங்கள் நடத்தப்படாமல்,பற்றாக்குறையாக இருந்ததால், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய, ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து, நமது  நேற்று விரிவான செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, சென்னை மாவட்ட தேர்வு குழு நிர்வாகிகள் கூடி, நேற்று ஆலோசனை நடத்தினர். முடிவில், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்வதாக, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மனோகரன் அறிவித்துள்ளார்.'மழையால் ஏற்பட்ட விடுமுறையாலும், ஆசிரியர்கள் பாடங்களை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கமுடியாத சூழல் உள்ளதாலும், சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த முன் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது' என, அவர்தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிப்பு எப்படி?

பள்ளி விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட, ஒவ்வொரு நாளும் தாமதமாகிறது. எனவே, கலெக்டர் ஒப்புதல் வழங்கியதும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, பெற்றோரின் மொபைல் போன் எண்களுக்கு, நேரடியாக, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பப்படும். அதேபோல், வகுப்பு ஆசிரியர்களின் மொபைல் போனுக்கும், தகவல் அனுப்பப்படும். அவர்கள், தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு, குறுஞ்செய்தி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும். இதன் வாயிலாக, மாணவர்களுக்கு, பள்ளி விடுமுறை குறித்து, அதிகாரப்பூர்வமான தகவல் கிடைப்பது உறுதி செய்யப்படும்.இதற்காக, மாணவர் விபரங்கள் அடங்கிய, 'எமிஸ்' தகவல் தொகுப்பில் இருந்து, பெற்றோர் மொபைல் போன் எண்களை பெறும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment