www.asiriyar.net

Saturday 4 November 2017

விடுமுறை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இதை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, நெல்லை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 31-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும்,  தமிழகம், புதுச்சேரியில் 2 அல்லது 3 நாள்களில் மழை படிப்படியாக குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் நாராயணபுரம் பகுதியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர். 

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், "தொடர் மழை காரணமாக மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறப்பதுகுறித்து அரசு பரிசீலிக்கும்" என்று கூறினார்.

No comments:

Post a Comment