www.asiriyar.net

Thursday 7 December 2017

பிளஸ் 1 செய்முறை தேர்வு- கையேடுகள் என்னாச்சு : குழப்பத்தில் ஆசிரியர்கள்

பிளஸ் 1 பொது தேர்விற்கான செய்முறை தேர்வு குறித்த வழிகாட்டுதல் கையேடுகள் வழங்கப்படாததால் மாணவர்களை எவ்வாறு தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.

இக்கல்வியாண்டு முதல் பிளஸ் 1 தேர்வு பொது தேர்வாக அறிவிக்கப்பட்டு, மார்ச் 7 முதல் துவங்கும் என தேர்வு அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டது. ஆனால் செய்முறை தேர்வு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.இதனால் செய்முறை உள்ளதா, இல்லையா என குழப்பம் நீடித்த நிலையில், 'பிளஸ் 1 பொதுத் தேர்வுடன் பிப்ரவரியில் செய்முறை தேர்வும் நடத்தப்படும்,' என அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை. பிப்.,யில் இத்தேர்வு நடக்கும் வாய்ப்பு உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "செய்முறை தேர்வை எப்படி நடத்துவது, மாணவர்களை எவ்வாறு தயார்படுத்துவது, வினாக்கள், அதற்கான மதிப்பெண் முறை தொடர்பான எந்த விவரமும் இதுவரை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தவில்லை.

பல அரசு பள்ளிகளில் பிளஸ் 1 செய்முறை தேர்வு குறித்த விழிப்புணர்வு இல்லாததால், தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்," என்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ் கூறியதாவது:பிளஸ் 2வுக்கு கல்வியாண்டு ஆரம்பத்திலேயே, தேர்வு வழிகாட்டுதல் கையேடுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பிளஸ் 1க்கான கையேடுகள் கூட இன்னும் வழங்கப்படவில்லை.

பிப்ரவரியில் செய்முறை துவங்கும் பட்சத்தில், மாணவர்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்ற புரிதல் இன்றி ஆசிரியர்களும் தவிக்கின்றனர். மாணவர்களும் அச்சத்தில் உள்ளனர். இத்தேர்வு குறித்துகல்வித்துறை தெளிவான வழிகாட்டுதல்களை உடன் வழங்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment