www.asiriyar.net

Friday 1 December 2017

பகுதிநேர ஆசிரியர்களுக்கு உடனே புதிய ஊதியம் வழங்க வேண்டும்

தமிழகப் பள்ளிகளில் பணியாற்றும் 16,549 சிறப்பு ஆசிரியர்களுக்கும் மாற்றியமைக்கப்பட்ட புதிய ஊதியத்தைக் கால தாமதமின்றி வழங்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தமிழகஅரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை,தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன் கல்வி, கட்டடக்கலைக் கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கடந்த 2012-இல் நியமிக்கப்பட்டனர். முழு நேர ஆசிரியர்களுக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்யும் போதிலும், இவர்களுக்கு மாதம் ரூ. 7,700 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. அமைச்சர் அறிவித்தும்கூட... தற்போது 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி ரூ.2,900 (30 சதவீதம்) உயர்த்தப்பட்டு மொத்தம் ரூ. 10,600 வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

ஆனால், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு புதிய ஊதியம் தொடர்பாக இதுவரை துறை ரீதியாக அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல் உள்ளது. எனவே பகுதிநேர ஆசிரியர்களின் பொருளாதாரச் சிக்கலைக் குறைக்கும் வகையில் அரசாணையின்படி மாற்றியமைக்கப்பட்ட புதிய ஊதியத்தை காலதாமதமின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment