www.asiriyar.net

Friday 15 December 2017

TNPSC - குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

குரூப்-4 தேர்வுக்கு வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு) மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -IV 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 14.11.2017 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க14.11.2017 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 13.12.2017 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இத்தேர்வுக்கென, இதுவரை தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக 18.33 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் இதுவரை நடந்த தேர்வுகளுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களைக்காட்டிலும் இத்தேர்வுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இருப்பினும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பயன்பெறும் வகையிலும் இதர விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் இந்த குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 20.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்வுக் கட்டணம் செலுத்த 21.12.2017 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இப்பதவிக்கான தேர்வினை குறிப்பிட்டுள்ள 11.02.2018 ஆம் தேதியன்று நடத்த பல்வேறு ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டபடியாலும், குறுகிய கால இடைவெளியே உள்ளபடியாலும், மேற்படி தேர்விற்கு இதன்பிறகு எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

எனவே அனைத்து மாவட்டத்தையும் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத்தேவையில்லை. அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டால் போதுமானது. தேர்வுநடக்கும் தேதியான 11.02.2018ல் எவ்வித மாற்றமுல் இல்லை'' என்று விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment