www.asiriyar.net

Thursday 4 January 2018

“பஸ் வசதிகூட இல்லாத கிராமத்தை திரும்பிப் பார்க்க வைச்சது அரசுப்பள்ளி மழலை ” - மழலையின் வைரல் வீடியோ!

“சுகாதார உறுதிமொழி... நான் எனது வீட்டிலோ வீட்டின் சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், பிளாஸ்டிக் கப்புகள் போன்ற பொருள்களைப் போட மாட்டேன். அவ்வாறு, ஏதேனும் பொருள்கள் கிடந்தாலும் உடனே அவற்றை அகற்றிவிடுவேன். 

எனது வீட்டில் தண்ணீர் சேமித்துவைக்கும் குடங்கள், டிரம்கள், சிமெண்ட் தொட்டிகள் ஆகியவற்றைக் கொசு புகாதவாறு மூடிவைப்பேன். வாரம் ஒரு முறை தொட்டியைத் தேய்த்து சுத்தம் செய்வேன். இதன்மூலம் ஏடிஸ் கொசு வளராமல் பார்த்துக்கொள்வேன். தற்போது, அரசு எடுத்துவரும் அனைத்துக் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என உளமார உறுதி கூறுகிறேன்”


அந்தப் பிஞ்சுக் குழந்தை, தன் மழலை மொழியில் இந்த உறுதிமொழியைச் சொல்லும்போது, தென்றல்கூட சில நிமிடங்கள் நின்று, மௌனம் காக்கிறது. அப்பப்பா... அந்தக் குரலில்தான் எத்தனை இனிமை. எப்படியான உச்சரிப்பு அது. 'கணீர் கணீர்' என வார்த்தைகள் வைரமாகத் தெறிக்க, சோசியல் நெட்வொர்க்கில் ஆறு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறாள் அந்தச் சுட்டி. 

“கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிக்குப் பக்கத்துல இருக்கும் அ.வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் நான். பஸ் வசதிகூட இல்லாத எங்க கிராமத்தை, உலகத்தின் ஏதோ ஓர் மூலையில் இருக்கும் மக்களும் திரும்பிப் பார்த்திருக்காங்க. அதுக்கெல்லாம் காரணம், ஜெயபெனடிக்டா. ஒன்றாம் வகுப்பு படிக்கும் துறுதுறு குழந்தை. எப்பவும் எதையாவது செஞ்சுட்டே இருப்பாள்'' என்றவர் சட்டென அமைதியாகிறார். 


அந்த அமைதி எதற்கோ அர்த்தம் சொல்ல தொடர்கிறார், “ஜெயபெனடிக்டா பற்றி சொல்லிட்டே போகலாம். இவ்வளவு ஆக்ட்டிவான அவள், மற்ற குழந்தைகள் மாதிரி கிடையாது. உயரம் குறைவு. உடம்பு திடீர் திடீர்னு சரியில்லாம போயிடும். அதனால், அடிக்கடி ஸ்கூலுக்கு வரமாட்டா. ஆனால், ஸ்கூல் வந்துட்டா ரொம்ப ஜாலியா இருப்பா. இன்னமும் எழுதத் தெரியாது. மணி மணியா பேசுவா. தன்னைச் சுற்றி என்ன நடக்குதுனு நல்லா வாட்ச் பண்ணிட்டே இருப்பா. எங்க பள்ளியில மொத்தம் 50 மாணவர்கள் படிக்கிறாங்க. ஜெயபெனடிக்டா இப்போ ஒன்றாம் வகுப்பு. அவள் அப்பாவுக்கு பெயின்ட் அடிக்கிற வேலை. 

இந்தக் கிராமம் எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஊராட்சி. டீ கடைகூட கிடையாது. மொபைலுக்கு எப்பவாச்சும்தான் சிக்னல் கிடைக்கும். இந்த நிலைமையிலதான் டெங்கு பரவுவதையும், தூய்மையின் அவசியம் பற்றியும் கிராமம் முழுக்க விழிப்பு உணர்வு பண்ணிட்டிருந்தோம். எங்க பள்ளியில் முழுத் தூய்மையைக் கொண்டுவந்தோம். அதற்காக, எங்க பள்ளிக்கு மத்திய அரசின் தூய்மைப் பள்ளிக்கான விருது கிடைச்சது. தினமும் தூய்மைகுறித்த உறுதிமொழியை ஒவ்வொரு மாணவர்களும் சொல்வாங்க. அப்படி சொல்வதை ஜெயபெனடிக்டா நல்லா கவனிச்சு அப்சர்வ் பண்ணியிருக்கா. அடிக்கடி அந்த உறுதிமொழியை சொல்லுறான்னு கிளாஸ் டீச்சர் என்கிட்ட சொன்னாங்க. அதை ரெக்கார்டு பண்ணி எங்க டீச்சர்ஸ் குரூப்ல ஷேர் பண்ணினோம். எல்லாரும் பார்த்து ஆச்சர்யத்துடன் பாராட்டினாங்க. அடுத்தடுத்த நாளில் அந்த வீடியோ நிறைய ஷேர் ஆகிருக்கு. யார் யாரோ போன் பண்ணி இந்தக் குழந்தைக்கு உதவுறதா சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. 


ரெண்டு நாளைக்கு முன்னாடி நியூ இயர் செலிப்ரேஷனில் எங்க கிராமத்து மக்கள் எல்லார் முன்னாடியும் அந்தச் சுட்டி உறுதிமொழி எடுக்க, ஊர்க்காரங்களும் சேர்ந்து சுகாதாரம் குறித்த உறுதிமொழி எடுத்துக்கிட்டாங்க. சின்னப் பொண்ணு இந்த வயசுலயே சுத்தம் பற்றி பேசுதே எனப் பலரும் சுத்தமா இருக்க ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க பல நாள்கள் செய்த விழிப்பு உணர்வு பிரசாரத்தைவிட ஜெயபெனடிக்டாவின் ஒரு வீடியோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு. எங்களைப் பொறுத்தவரை, ஜெயபெனடிக்டா ஒரு சுகாதாரத் தூதுவர்தான்” எனப் பெருமையுடன் சொல்கிறார், தலைமையாசிரியர் சாகுல் ஹமீது. 

ஜெயபெனடிக்டா வகுப்பறையில் ஆத்திசூடி படித்துக்கொண்டிருப்பதாகச் சொல்ல, தொலைபேசியைக் கொடுக்குமாறு கேட்டோம். சில நிமிடங்களில், அந்த மழலைக் குரல்... எடுத்த நொடியிலேயே, ''நான் தொரத்தி புடிச்சு வெளாடப்போறேன்' எனச் சொல்லிவிட்டு, குடுகுடுவென ஓடும் சத்தம். இரண்டாவது முயற்சியில் பேசவைத்தார் ஆசிரியர். 


'வணக்கம் சார்... நான் ஜெயபெனடிக்டா பேசுறேன். நீங்க நல்லா இருக்கீங்களா? என்ன சாப்டீங்க?'' எனத் தேன் ஒழுகும் குரல் மனதை வருடியது. “குட்டிப் பாப்பா ஒரு எடத்துல இருக்க மாட்டீங்களா? ஓடிட்டே இருப்பீங்களா?” என்று கேட்டதும், “சார், நான் ரொம்ப நல்ல பொண்ணு. வேணா ஆத்திசூடி சொல்லட்டா... அறம் செய்ய விரும்பு... ஆறுவது சினம்” என அத்தனை வரிகளையும் கடகடவென பாடினாள். 





“அம்முக்குட்டி ரொம்ப அழகா பாடுறீங்களே, அப்படியே அந்த உறுதிமொழியையும் சொல்லுங்க பாப்போம்” என்றதும், “சுகாதார உறுதிமொழி. நான் எனது வீட்டிலோ...” என்று ஆரம்பித்து அத்தனை வரிகளையும் அழகாகச் சொல்லி முடித்து, “சார், நான் தொரத்தி புடிச்சு வெளாடப் போறேன். நீங்க வர்றீங்களா” என்றவாறே ஓடிவிட்டாள். 

பேருந்து வசதிகூட இல்லாத ஊராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவி ஜெயபெனடிக்டா, தன் உறுதிமொழியில் இறுதியாக ஒன்றைச் சொல்லியிருப்பார். 'தற்போது அரசு எடுத்துவரும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்' என்பதே அது.

அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும் இந்த ஏழை மாணவியை அரசு கண்டுகொள்ளுமா?

நன்றி :விகடன்

No comments:

Post a Comment