www.asiriyar.net

Saturday 3 March 2018

பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வெழுத நிரந்தரத் தடை: அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை

பொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்யும் மாணவர்களுக்கு தேர்வு எழுத நிரந்தரத் தடை விதிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

தேர்வு அறையில் தேர்வர் மற்றொரு தேர்வரைப் பார்த்து எழுதுவது கண்டறியப்பட்டால் அந்த மாணவர் ஓராண்டுக்குத் தேர்வு எழுத முடியாது. தேர்வெழுதும் மாணவர் விடைகள் அடங்கிய துண்டுச் சீட்டு வைத்திருந்தாலோ அதைப் பார்த்து தேர்வெழுத முயன்றாலோ அந்த மாணவர்அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால், 'கிரிமினல்' நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த மாணவர் நிரந்தரமாகத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்.

அதிக மதிப்பெண் தரும்படி, விடைத்தாளில் எழுதுவது, வேண்டுகோள் விடுப்பது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் விடைத்தாள்கள் ரத்து செய்யப்படும். கண்காணிப்பாளரை மிரட்டுவது, தாக்குவது, கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது நிரந்தரமாகவோ தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். விடைத்தாள்களைத் திருப்பித் தராமல் எடுத்துச் செல்வது, கிழித்து சேதப்படுத்துவது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மாணவரின் தேர்வு ரத்து செய்யப்படும். வினாத்தாளை, 'லீக்' செய்தால், மூன்று ஆண்டுகள் வரை தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்.

முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர், விளக்கம் எழுதித் தர மறுத்தால், அந்த தேர்வு மட்டுமின்றி, எதிர்காலத்தில் தேர்வு எழுதவும்தடை விதிக்கப்படும்.விடைத்தாள்களை மற்ற மாணவர்களிடம் மாற்றி, எழுதி வாங்கினால், ஐந்து ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது. விடைத்தாள்களில் பெயர், 'இனிஷியல்' அல்லது சிறப்புக் குறியீடுகள் கண்டறியப்பட்டால், அந்த விடைத்தாள்களின் மதிப்பீடு நிறுத்தப்படும்.

No comments:

Post a Comment