www.asiriyar.net

Wednesday 13 September 2017

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம்: பல ஆயிரம் பேர் கைது

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்தபடி இன்று 2வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்டங்களில் போலீசார் குவிக்கப்பட்டு மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராகவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜாக்டோ-ஜியோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில்நடந்துவரும் தொடர் போராட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்த பிறகும், அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஜாக்டோ-ஜியோ கடந்த 9ம் தேதி அறிவித்தது. இதற்காக 6 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அறிவிக்கப்பட்டபடி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். இன்று 2வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மேலும், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் குறிப்பாணைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாணை பெற்றதும் 15 நாட்களுக்குள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் 17-பி பிரிவின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.அத்துடன் மதுரை உயர்நீதிமன்றம் விதித்த தடையை மீறி வேலை நிறுத்தம் செய்வதால் ஜாக்டோ-ஜியோ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அவ்வழக்கு இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் மோசஸ், சுப்ரமணியன், தாஸ் உள்ளிட்டோர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.மறியல் போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:எத்தனை  தடை வந்தாலும் எங்கள் போராட்டம் நடக்கும். எங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.18 ஆயிரத்து 600 கோடி ரூபாயைதான் திரும்ப கேட்கிறோம். ஆனால் எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்று அரசு கூறுகிறது. எங்கள் பணத்தை திரும்ப கொடுக்க அரசு ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? அதனால் திட்டமிட்டபடி மறியல் நடக்கும். போலீசார் கைது செய்தாலும் வேலை நிறுத்தம் தொடரும்.இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment