www.asiriyar.net

Tuesday 26 September 2017

ஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த மனு விவரம்: நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் 23 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (ஐஐடி), 31 தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (என்.ஐ.டி), 7 இந்திய அறிவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) இயங்கி வருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதில்லை.

மேலும் இடஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படுவதில்லை. ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிப்பதில் பல்வேறு முரண்பாடுகளும் உள்ளன. ஓய்வுபெற்ற பேராசிரியர்களை நியமிக்கும் இந்தக் கல்வி நிறுவனங்கள், உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பான 35 வயதை தளர்த்துவது இல்லை. இந்தக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றும் வகையில் கல்வித் தகுதி, வயது வரம்பு ஆகியவற்றை மாற்றியமைக்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். 

இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குத் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் அக். 13- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment