www.asiriyar.net

Thursday 7 September 2017

FLASH NEWS : NEET தேர்வுக்கு எதிர்ப்பு: அரசுப் பள்ளி ஆசிரியை ராஜினாமா

'நீட்'டுக்கு எதிராக அரசுப் பணியை உதறித்தள்ளிய ஆசிரியை சபரிமாலா!
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரே கல்விமுறை என்பதை வலியுறுத்தி, திண்டிவனம் அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா, நேற்று தனது 7 வயது மகனுடன் உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில், 'போராட்டங்களில் ஈடுபடக்கூடாது' என்று துறை ரீதியாக அவர் எச்சரிக்கப்பட்டதால், தனது அரசுப் பணியை அதிரடியாக ராஜினாமா செய்திருக்கிறார்.

நீட்

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை, ’நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டமாக வெடித்திருக்கிறது. இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் அதே பள்ளியில் படிக்கும் தனது 7 வயது மகனுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். நேற்று காலை வகுப்பைப் புறக்கணித்துவிட்டு, தன் மகன் ஜெயசோஷனுடன், தான் பணிபுரியும் பள்ளியின் முன் அமர்ந்த சபரிமாலா, ’இந்தியா முழுவதும் ஒரே கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும் ’நீட்’ தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை வலுக்கட்டாயமாகக் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

அரசு ஊழியராக இருந்துகொண்டு, அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று துறைரீதியாக அவரை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, இன்று மாவட்டக் கல்வி அலுவலகம் சென்ற ஆசிரியை சபரிமாலா, தனது ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “அரசு ஊழியர்களுக்குப் போராட்டங்கள் செய்ய அனுமதி கிடையாது என்று கூறுகிறார்கள். நான் சார்ந்த மக்களுக்காக எனது உணர்வுகளை வெளிப்படுத்தத் தடையாக இருக்கும் இந்த வேலை எனக்குத் தேவையில்லை. நாளை எனது வீட்டு வாசலில் போராட்டத்தை நடத்துகிறேன்” என்றார் ஆவேசமாக.  

No comments:

Post a Comment