www.asiriyar.net

Monday 11 September 2017

JACTTO-GEO : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 85 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் - சந்திக்க தயார் என ஆசிரியர்கள் பேட்டி

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் 85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7ஆம்தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 60 சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இவர்கள் தங்களது போராட்டத்தை அக்டோபர் 15ஆம்தேதி வரை ஒத்திவைத்தனர்.

இதனால் ஜாக்டோ ஜியோ சங்கம் 2 ஆக உடைந்தது. இதில் 17 சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம்- மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களது போராட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்திருந்தாலும் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் இதனை, ஜக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து மாவட்டங்களிலும் நாளை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
செப்டம்பர் 12ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்ட ஜக்டோ-ஜியோ நிர்வாகிகள், தமிழக அரசிடம் இருந்து சாதகமான அறிவிப்பு வரவில்லை எனில், வரும் 13ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் நேற்று எடுத்த கணக்கெடுப்பு படி 43 ஆயிரத்து 450 ஆசிரியர்கள், 41 ஆயிரத்து 550 அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில் போராட்டத்தில் ஈடுபட்டால் நோட்டீஸ் அனுப்புவதும் சம்பளத்தை நிறுத்துவதும் அரசு எடுக்கும் வழக்கமான நடைமுறைதான். நாங்கள் அதை எதிர் கொண்டு எங்கள் கோரிக்கை நிறைவேற போராடுகிறோம்.
எங்களை பொறுத்தவரை எந்தவித நடவடிக்கை மேற்கொண்டாலும் அதை எதிர்கொள்ள தயார். எங்கள் உரிமைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment