www.asiriyar.net

Tuesday 12 September 2017

JACTTO - GEO : எஸ்மா, டெஸ்மாவுக்கு பயப்பட மாட்டோம் என சங்கங்கள் அறிவிப்பு

அரசு விடுத்த எச்சரிக்கை, நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு ஆகியவற்றை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், அவர்கள் மீது வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாக 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட போராட்டம் கடந்த 22ம் தேதி ஒரு  நாள் அடையாள வேலை நிறுத்தமாக முடிந்தது. அதற்கு பிறகு செப்டம்பர் 7ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதை முறியடிக்கும் வகையில் கடந்த 6ம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு வார்த்தை நடத்தினார். 

அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ சங்கம் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் புதிய அணி உருவாக்கப்பட்டது. அவர்களின் வழிகாட்டுதலின்படி, கடந்த 7ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் நடந்தது. அதில் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். இதனால் பள்ளிகள், அலுவலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை போராட்டத்துக்கு  தடை விதித்தது. அதற்கேற்ப 8ம் தேதி நடக்க இருந்த மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது. இந்தபோராட்டங்களில் சுமார் 7 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். நீதிமன்றம் தடை காரணமாக  மீண்டும் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு சென்னையில் கூடியது. அதில் 6 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், 11ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்வது, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், 12ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 13ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, 7ம் தேதி மற்றும் 8ம் தேதிகளில் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 9ம் தேதி அரசு தரப்பில் நோட்டீஸ்(17-ஏ) அனுப்பி சஸ்பெண்ட் மிரட்டல் விடுத்தது. ஆனால், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்

அந்த நோட்டீஸ் குறித்து கவலைப்படவில்லை. திட்டமிட்டபடி 11ம் தேதி வேலை நிறுத்தம் நடக்கும் என்று தெரிவித்தனர். இந்நிலையில், இந்த போராட்டத்தில் பங்கேற்கும் 95 சங்கங்கள் பெயர்கள், முக்கிய பிரதிநிதிகள் பெயர்கள் அடங்கிய பட்டியலை ஜாக்டோ-ஜியோ செய்தித் தொடர்பாளர் தியாகராஜன் நேற்று முன்தினம் வெளியிட்டார். அறிவித்தபடி, நேற்று காலை தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்றனர். இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், வெங்கடேசன் ஆகியோர் கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ அமைப்பில் தற்போது 95 சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது. ஆனால், அரசு உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், பணிக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  கைது செய்து சிறையில் அடைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அரசு துறையினர் கடுமையாக பயமுறுத்துகின்றனர். ஆனால் இன்று முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் தீவிரம் அடையத் தொடங்கிவிட்டது.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை எங்கள் போராட்டத்தை தடுத்த நிறுத்த முடியாது. கடந்த 53 ஆண்டுகளாக அனுபவித்து வந்த ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என்று கேட்கிறோம். புதிய ஓய்வு ஊதிய திட்டம் வேண்டாம் என்கிறோம். எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு ஓய்வு ஊதியம் உண்டு. ஆனால் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கிடையாது என்பது என்ன நியாயம்.
பென்ஷனை தடுத்து நிறுத்துகிறார்கள் என்று போராட்டம் நடத்தினால், அதற்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. எனவே போராட்டத்துக்கு விதித்த தடையை மதுரை உயர் நீதிமன்றக் கிளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் வேலை நிறுத்தம் தொடரும். என்ன செய்தாலும், எஸ்மா, டெஸ்மா போன்றவற்றை கொண்டு வந்தாலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எங்கள் கோரிக்கை மீது முதலவர் உறுதி மொழி அளிக்க வேண்டும். இல்லை என்றால் தொடரும். இன்று (12ம் தேதி) தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல்  போராட்டம் நடக்கும். அதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம். அரசின் எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம். எஸ்மா, டெஸ்மா சட்டம் கடந்த காலத்தில் போட்டார்கள். அதைப்போட்ட பிறகு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அதனால் இழந்த பலன்களை பெற்றுள்ளனர். அதனால் எந்த நடவடிக்கை எடுத்தாலும் பயப்படமாட்டோம். இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், வெங்கடேசன் ஆகியோர் தெரிவித்தனர்.

பள்ளிகள் மூடல் காஞ்சிபுரம் மாவட்டம் மொறப்பாக்கம் ஊராட்சியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் போராட்டம் காரணமான நேற்று ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. இதனால் பள்ளி மூடப்பட்டிருந்தது. சில மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கடும் கட்டுப்பாடு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பட்டியலை அரசு தயார் செய்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் 65 ஆயிரம் பேரும், ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேரும் நேற்று பணிக்கு வரவில்லை. போராட்டம் காரணமாக பலர் விடுமுறை எடுப்பது, மருத்துவ விடுப்பு போடுவது என்று பல்வேறு வகையில் விடுப்பு எடுக்கின்றனர். விடுப்பு எடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

No comments:

Post a Comment