www.asiriyar.net

Monday 16 October 2017

2018 ஜனவரி முதல் டிஜிட்டல் முறை: 9 லட்சம் அரசு ஊழியர்கள், சுமார் 8 லட்சம் ஓய்வூதியர் விவரங்கள் டிஜிட்டல் மயம்!

தமிழக அரசின் நிதி மேலாண்மை பணிகளை எளிமைப்படுத்தவும், 9 லட்சம் அரசு ஊழியர்கள், 7.39 லட்சம் ஓய்வூதியர்களுக்கான நிதி சேவைகளை டிஜிட்டல் மயமாக்கவும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது, 2018 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் மூலம், தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் விரல் நுனியில் கொண்டுவரப்படுகிறது. இதற்காக விப்ரோ நிறுவனத்தை திட்ட ஒருங்கிணைப்பாளராக இணைத்து தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

தமிழகத்தில் 6 மண்டல கருவூல கணக்குத்துறை இணை இயக்குநர் அலுவலகங்கள், 6 சம்பளக் கணக்கு அலுவலகங்கள், 3 சார் சம்பளக் கணக்கு அலுவலகங்கள், 32 மாவட்டக் கருவூலங்கள், ஓய்வூதியர் உதவி அலுவலகம், 243 சார்நிலை கருவூலங்கள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் பெற்று வழங்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 23,648 அலுவலர்கள் டிஜிட்டல் மயாமக்கல் மூலம் நேரடி இணைய வலையில் இணைக்கப்படுவர்.


இதன் மூலம் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. சம்பளப் பட்டியல், ஊதிய உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்படும். கடந்த 2016 நவம்பரில் சென்னை, ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில் கணினிமயமாக்கும் பணிகள் தொடங்கின. 

இதன் தொடர்ச்சியாக 32 மாவட்டங்களுக்கும் விரிவாகக்கம் செய்யப்பட்டு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதன் மூலம், ஒரு அரசுப் பணியாளர் முதன்முதலாக பணிக்கு சேர்ந்த நாள் தொடங்கி ஓய்வு
பெறும் வரை உள்ள அரசுப் பணி வரலாறு முழுவதும் கணினிமயமாக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 7 லட்சத்து 39 ஆயிரம் ஓய்வூதியர்களில் 6 லட்சத்து 60 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு கருவூல அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள் மூலம் 79 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் பெறுதலில் உள்ள தாமதங்கள், நேர்காணலில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் 79 ஆயிரம் பேரையும் கருவூலம் வழியாக ஓய்வூதியம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இவர்களும் டிஜிட்டல் மயத்துக்குள் வந்துவிடுவர். வங்கிக் கணக்கில் மாதாந்திர ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் விவரம், வருடாந்திர ஓய்வூதிய விவரம், ஓய்வூதியர்கள் நேர்காணல் விவரம் மற்றும் ஓய்வூதியர்களுக்கு தேவையான அனைத்து விவரங்கள், படிவங்களைப் பெற ஓய்வூதியர் தரவு தளம் உருவாக்கப்படுகிறது. 

இந்த தளத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். தேவையின்றி வங்கிக்கோ, கருவூலத்துக்கோ, பணிபுரிந்த அலுவலகத்துக்கோ அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை. 

இத் திட்டத்தின் மூலம், மாநில அரசுக்கு எந்தெந்த மாவட்டத்தில் இருந்து எவ்வளவு வருவாய் வந்துள்ளது என்பதை நொடிக்கொரு முறை அறிந்து கொள்ளலாம். இதற்காக அலுவலர்களுக்கு எண்ம ஒப்பம் (டிஜிட்டல் கையெழுத்து) வழங்கப்பட்டு, விரல் ரேகைப் பதிவு மூலம் மாநிலத்தின் நிதிநிலை விவரங்களை அரசுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தலாம். 

அரசு ஊழியர்களின் பணி விவரங்கள், விடுப்பு, இப்போதைய நிலை ஆகியவற்றையும் மாவட்டம் வாரியாக அறிந்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் வறட்சி நிவாரண நிதியை கருவூலம் மூலம் கையாளுவதிலும் பணிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. 

நிகழாண்டு 26.61 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.1790.19 கோடி வறட்சி நிவாரணத் தொகையானது மின்னணு தீர்வை (ஈசிஎஸ்) மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் மொத்த வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்குவதில் செலவிடப்படும் சூழலில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இதுதொடர்பாக, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் கூறியது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 

வரும் டிசம்பருக்குள் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் விவரங்களும் கணினிமயமாக்கப்பட்டுவிடும். இதேபோல, ஓய்வூதியர்களுக்கான தரவு தளமும் உருவாக்கப்படும். இத் திட்டத்தை செயல்படுத்தும் அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும், மென்பொருள் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 2018 ஜனவரி முதல் டிஜிட்டல் முறையில் அனைத்து சேவைகளும் எளிதாகக் கிடைக்கும். 

அரசின் நிதி நிர்வாகப் பணிகளும் இணைய வழியில் இருந்த இடத்தில் அமர்ந்து செயல்படுத்த முடியும். பணிப் பதிவேடுகள் காணமாமல் போகும் என்ற பேச்சுக்கு இடமிருக்காது. ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும், திட்டமிடலுக்கும் டிஜிட்டல் மயம் பெரிதும் உதவியாக அமையும். ஆதாரப் பூர்வமான பணி விவரங்கள் கணினியில் இருப்பதால் பணிமாற்ற முடிவுகளை தாமதமின்றி முறையாக அறிவிக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment