www.asiriyar.net

Monday 2 October 2017

அரசு அலுவலகங்களில் வியாழன்தோறும் டெங்கு கொசு ஒழிப்பு நாள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்த மாதம் முதல் தமிழகத்தில் வியாழக்கிழமைகளில் டெங்கு
கொசு ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்படும் என்று அமைச்ச்ர விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்றனர். உள்ளாட்சித்துறை உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முதல்வர் பழனிசாமி பல்வேறு டெங்கு ஒழிப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினார். பள்ளி கல்வி, கல்லூரிகள் ஒன்றிணைந்து களப் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தேவைப்படும் அத்தனை மருந்து மாத்திரைகளை வாங்கி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத் துறையின் 24 மணி நேர காய்ச்சல் கண்காணிப்பு மூலம் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 40 நிமிடங்களில் ரத்த தட்டணுக்களை கண்டறியும் வசதி அரசு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதனை விரவுபடுத்த முதல்வர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

டெங்கு கொசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறை முடிந்து பள்ளி திறக்க உள்ளதால், பள்ளி வளாகங்களில் கொசுக்கள் இல்லாமல் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பகல் வேளையில் கடிக்கும் கொசுக்களாலேயே டெங்கு பரவுகிறது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் முதல் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்படும். அன்றைய தினம் அரசு அலுவலகங்களை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.


நில வேம்பு கஷாயங்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை காலை முதல் சென்னை மாநகராட்சி முழுமைக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கும் பணி தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை விரைவுபடுத்தி வருகிறது என்று கூறினார்.

No comments:

Post a Comment