www.asiriyar.net

Wednesday 15 November 2017

நுழைவு தேர்வு பயிற்சிக்கு, 'பஸ் பாஸ்' கிடைக்குமா?

பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்துக்கு சென்று வர, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மாணவ - மாணவியரிடம் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், பிளஸ்2 படிக்கின்றனர். இவர்களில், நான்கு லட்சம் பேர், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள், பிளஸ் 2க்கு பின், மருத்துவம் படிக்க, நீட் நுழைவு தேர்விலும், தேசிய உயர் கல்வி நிறுவனங்களில், பொறியியல் படிக்க, ஜே.இ.இ., நுழைவு தேர்விலும், தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், நீட் தேர்வு எழுத, சரியான பயிற்சி இல்லாததால், இரண்டு ஆண்டுகளாக, அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நீட் உட்பட, மத்திய அரசின் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ள, தமிழக அரசின் சார்பில், இலவச பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 412 மையங்களில், பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சிக்காக, மாணவர்கள், சனிமற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தங்கள் பள்ளி அல்லாமல், வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காக, தனியாக பஸ் பாஸ் வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது: தற்போது வீட்டிலிருந்து, பள்ளி இருக்கும் இடம் வரை மட்டுமே, பஸ் பாஸ் உள்ளது. ஆனால், நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையம், வேறு இடத்தில் இருப்பதால், இந்த பாசை பயன்படுத்தி, அங்கு செல்ல முடியாது. சாதாரண கூலி தொழிலாளரான பெற்றோரால், பஸ் டிக்கெட்டுக்கு பணம் தர முடியாத நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment