www.asiriyar.net

Friday 10 November 2017

பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்ட கலெக்டர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள், சுகாதார பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பில்லூர்மட்டம், கீழ் ஆர்செடின், மேல் ஆர்செடின், நான்சச் ஆகிய குடியிருப்பு பகுதிகள், குடிநீரில் குளோரின் அளவு ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நான்சச் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தார். அதன் பின்னர் திடீரென அங்கு பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மதியம் சத்துணவு சாப்பிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வியப்படைந்தனர்.

அதனை தொடர்ந்து பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், இந்திரா நகர், பாரத் நகர், கல்குழி ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், பாரத் நகரில் செயல்பட்டு வரும் ஆரம்ப பள்ளியின் சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரத்தினை ஆய்வு செய்தார்.

அப்பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை மற்றும் தனிநபர் கழிப்பறை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் குன்னூர் கோட்டாட்சியர் கீதாபிரியா, வட்டாட்சியர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment