www.asiriyar.net

Friday 10 November 2017

TNTET - கலந்தாய்வுக்கு அழைக்காமல் இழுத்தடிப்பது ஏன்? பட்டதாரி ஆசிரியர்கள் மனவேதனை

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 27.4.2017 அன்று பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி இடங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் பள்ளிக்கல்வி துறையில் 595 பின்னடைவு காலிப்பணியிடங்களும், 
286 தற்போதைய காலிப்பணி இடங்களும், தொடக்கக்கல்வி துறையில் 28 பின்னடைவு காலிப்பணி இடங் களும், சமூக பாதுகாப்பு துறையில் 3 இடங்களும், அனைவருக் கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் 202 இடங்களும் என மொத்தம் 1,114 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டன.

இதன்படி, தகுதியானவர்களை அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தற்காலிக தேர்வு பட்டியல் கடந்த ஜூன் 30-ந்தேதி வெளியானது. இதில் தொடக்கக்கல்விபட்டதாரி ஆசிரியர்கள், சமூக பாதுகாப்பு துறை பட்டதாரிஆசிரியர்கள், அனைவருக்கு இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு அழைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர்களை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் மனவருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரவி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த், கிருஷ்ணகிரிமாவட்டத்தை சேர்ந்த வேடியப்பன், கொடைக்கானலை சேர்ந்த கலைச்செல்வி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சியாமளா ஆகியோர் கூறியதாவது:-சான்றிதழ் சரிபாப்பு முடிந்து, தற்காலிக தேர்வு பட்டியல் வெளியானதும், நாங்கள் ஏற்கனவே பணிபுரிந்து வந்த தனியார் பள்ளிகளில் இருந்து பணியில் இருந்து விலக்கிவிட்டார் கள். இந்த பணியை நம்பி கடந்த 4 மாதங்களாக தவமாய் தவம் இருந்து காத்து கொண்டு இருக்கிறோம். எங்களுடன் தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலர் பணிக்கு சென்று 2 மாதம் சம்பளத்தையும் வாங்கிவிட்டனர்.பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட எங்களை மட்டும் ஓர வஞ்சனையாக ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள்.

 இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினால் காத்து இருங்கள் என்று சொல்கிறார்கள். எவ்வளவு நாள்? இப்படி காத்து இருப்பது. மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்றுவிட்டோம். வீட்டில் எவ்வளவு நாள் சும்மா இருக்கமுடியும்? எங்கள் வேதனையை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வுக்கான அழைப்பை உடனடியாக தெரிவிக்க வேண்டும். ஏன் இப்படி இழுத்தடிக்கிறார்கள்? என்பதை அவர்கள் தெரிவித்தால் நிம்மதியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலர், கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்றால், ‘தற்கொலை செய்து கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை’ என்ற வார்த்தையை மனவேதனையில் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குனரை நேரில் சென்று பார்க்க முயற்சித்த போது அவர் சந்திக்கவில்லை.மேலும், செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை.

No comments:

Post a Comment