www.asiriyar.net

Sunday 24 December 2017

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு 156 பேர் மீது வழக்கு பதிவு: அதிகாரிகள் பீதி

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட, 156 பேர் மீது, முதற்கட்டமாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில், தேர்வு வாரியம் மற்றும் கல்வி துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு பாலிடெக்னிக்குகளில் உள்ள, 1,058 விரிவுரையாளர் பணிஇடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, செப்., மாதம் எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வை, 1.30 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், நவ., 7ல் வெளியிடப்பட்டன. இதில், 2,500 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, அனைத்து தேர்வர்களின் விடைத்தாள் நகல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அப்போது, பலரின் மதிப்பெண்களில் பெரிய வித்தியாசம் காணப்பட்டது.

இதை ஆய்வு செய்ததில், தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இதன்பின், தேர்வு முடிவுகள், திரும்ப பெறப்பட்டன.முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், உமா, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மனுவில் கூறப்பட்டதாவது:

தேர்வு எழுதியவர்களில், 196 பேர் தவறு செய்துள்ளதாக தெரிகிறது. அவர்களின் மதிப்பெண்கள், ஓ.எம்.ஆர்., எனும் விடைத்தாள் நகலில் உள்ளதை விட, அதிகமாக உள்ளது.தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவதற்காக, இவர்கள் யாரையெல்லாம் அணுகினர்; எவ்வளவு பணம் கொடுத்தனர்; இடைத்தரகர்கள் யார் யார்; ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் யார் என்பதையெல்லாம் விசாரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை துவங்கிய, மத்திய குற்றப்பிரிவு போலீசார், முறைகேட்டில் ஈடுபட்டதாக, 156 பேர் மீது, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.இவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.மேலும், இணையதளத்தை பராமரிக்கும் டில்லி தனியார் நிறுவனம், ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகளுக்கும், இதில் தொடர்பு இருப்பதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

'ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment