www.asiriyar.net

Saturday 2 December 2017

பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல் என்ற மாணவன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வரும் 3-ஆம் தேதி திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் 45 நாட்கள் அரசு கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் கண்காட்சி நடத்தினால் வகுப்புகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி கிருபாகரன் தலைமையினா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கண்காட்சி நடத்துவதற்கு 90 சதவீத ஏற்பாடுகள் முடிவடைந்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ப்பட்டுள்ளதால் திருப்பூர் சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் கண்காட்சி நடத்த தடை விதிக்க முடியாது.

மேலும் வரும் காலங்களில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொருட்காட்சி மற்றும் கண்காட்சி நடத்த தடை விதிப்பதாக அறிவித்த நீதிபதி, இதுகுறித்து அரசு விதிமுறைகள் வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment