www.asiriyar.net

Sunday 24 December 2017

பணிகள் முடங்கும் அபாயம் ஜாக்டோ ஜியோ, போக்குவரத்து, ஊரக வளர்ச்சித்துறை ஜனவரி முதல் தொடர் போராட்டம்

தமிழகத்தில் ஜனவரியில் இருந்து அடுத்தடுத்து போராட்டங்கள் வெடிக்க உள்ளன. இதை  அரசு  எப்படி சமாளிக்க போகிறது என்ற கேள்வி, அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஏற்கனவே பல கட்ட போராட்டங்கள் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஊரக  வளர்ச்சித்துறை சங்கத்தினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.


கோரிக்கைகள் முறையாக நிறைவேற்றப்படும் என உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிட்டவர்கள், மீண்டும் போராட்ட களத்துக்கு வர  உள்ளனர்.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய பிரச்னை காரணமாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 27, 28 ம் தேதி  பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதால், அதன் பின்னர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்க உள்ளதாக கூறி உள்ளனர். அநேகமாக  பொங்கல் பண்டிகையையொட்டி காலவரையற்ற வேலை நிறுத்தம் இருக்கும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.  


இது தவிர ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கிராம ஊராட்சியில் பணியாற்றக்கூடிய ஊராட்சி செயலர்களுக்கு, இளநிலை  உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த நவம்பர் 23ம் தேதி போராட்டம் நடத்தினார்கள். 

இவர்கள் டிசம்பர் 29ம் தேதி முதலமைச்சரை சந்தித்து பெரும் திரள்முறையீடு போராட்டம் நடத்த உள்ளனர். அதன் பின்னரும் கோரிக்கை  நிறைவேறவில்லை என்றால், ஜனவரியில் மறியல் போராட்டமும், பின்னர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் நடத்த உள்ளனர். தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளாக கிராமப்புற ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், மாவட்ட பஞ்சாயத்து  உறுப்பினர்களான வார்டுகள் ஒழுங்குப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. 

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஜனவரி இறுதி வாரம் அல்லது பிப்ரவரி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை உள்ளாட்சி  தேர்தல் ஏற்பாடுகளில் சிக்கல் ஏற்படலாம்.  

இதே போல் ஏற்கனவே தெரிவித்திருந்த சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான  ஜாக்டோ ஜியோ அமைப்பினரும், காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய போவதாக அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். 

இது போன்ற தொடர் போராட்டங்களால் ஜனவரியில் இருந்து அரசு இயந்திரம் முழுமையாக இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  இதற்கிடையே  லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை கண்டித்து ஜனவரி 1ம் தேதி முதல் போராட போவதாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா  அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment