www.asiriyar.net

Tuesday 5 December 2017

வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் புயல் சின்னம்! கடலோர மாவட்டங்களுக்கு, கன மழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் புயல் சின்னம், நாளை முதல், கடலோர பகுதிகளை நோக்கி நகரத் துவங்கும். அதனால், தமிழகம், ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி முதல் குஜராத் வரை, அரபிக் கடலில் தாண்டவமாடிய, 'ஒக்கி' புயல், இன்று கரையை கடக்க உள்ள நிலையில், வங்கக் கடலில், அந்தமான் அருகில் உருவாகியுள்ள, புதிய புயல் சின்னம், நாளை முதல் நகர்வை துவங்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.


தற்போது, காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மேலும் வலுவாகும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாளை முதல், தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களை நோக்கி அது நகரும் என, தெரிகிறது. இந்த புயல் சின்னம் நகரும்போது ஏற்படும், கடலின்

மேற்பரப்பு ஈரப்பதம் மற்றும் காற்றுச் சூழலை பொறுத்து, புயலாக மாறும் அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடித்து, கன மழையை கொட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் சின்னத்தால், ஒடிசா வரை கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று, அந்தமான் நிகோபார் தீவுகளில் கன மழை இருக்கும் என, வானிலை மையம்தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்கு, இன்று மழை எச்சரிக்கை விடப்படவில்லை. ஆனால், நாளை முதல் மழை பெய்யலாம் என்பதை, இன்று, சென்னை வானிலை மைய இயக்குனர், பாலச்சந்திரன் அறிவிப்பார்.ஏற்கனவே, ஒக்கி புயல் பாதிப்பால், தென் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால், அடுத்து புயல் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இது, புயலாக மாறினால், மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம் இடையே, கரையைகடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சில நேரங்களில், ஒடிசாவுக்கு திரும்பவும் வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த நாட்களில், தாழ்வு மண்டலத்தின் நகர்வை பொறுத்து, கரை கடக்கும் இடம் முடிவாகும்.

தற்போதைய நிலையில், செயற்கை கோள் ஆய்வு, வானிலை ஆய்வு குறிப்புகள் மற்றும் தோராய வழித்தட கணிப்புகளின் படி, தமிழகம், புயல் ஆபத்திலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது.அதனால், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளது உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment