www.asiriyar.net

Saturday 2 December 2017

திருக்கார்த்திகை தினத்தில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?

தமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இது, ஒளி வடிவில் இறைவனைக் கொண்டாடும் விழா. சங்ககால தமிழகத்தில் கொண்டாடப்பட்ட பல விழாக்களில் சில உருமாறிவிட்டன; வேறு சில வழக்கொழிந்துவிட்டன. திருக்கார்த்திகை தீபம் மட்டுமே நிலைத்திருக்கிறது.


‘கார்த்திகை விளக்கீடு’ என இலக்கியங்கள் போற்றும் தீபத்திருவிழாவில், பனைமரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. அது பற்றி அறிவதற்கு முன்னர், `பூலோக கற்பகவிருட்சம்’ என்று புராணங்கள் போற்றும் பனைக்கு உரிய ஆன்மிக மகத்துவங்களைத் தெரிந்துகொள்வோம்.

* பனை ஓலைகள் கூரை வேய, ஓலையின் அடிக்காம்புகள் நார் எடுக்க, பழங்கள் (நுங்கு) உணவாக, பனைமரத்தின் பாளையை வெட்டினால் பதநீர்... இப்படி பனையின் அனைத்து பாகங்களும் நமக்குப் பயன்படுவதால், இதை `பூலோகக் கற்பகவிருட்சம்’ என்று சிறப்பிப்பார்கள்.

* பனையில் தாலி, கல்பனை, தாடகை எனப் பலவகைகள் உள்ளன.

* பல திருத்தலங்களின் ஸ்தல விருட்சமாகவும் திகழ்கிறது பனை. திருப்பனந்தாள், வன்பார்த்தான் பனங்காட்டூர், பனையபுரம், திருவோத்தூர் ஆகிய தலங்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். `கன்றாப்பூர்’ எனும் தலத்தில் கல்பனை தலமரமாக உள்ளது என்பார்கள்.

திருவோத்தூர் தொண்டைநாட்டு சிவத்தலம். இங்கே, சிவபெருமானுக்குப் பனம் பழங்களைப் படைக்க விரும்பிய அடியார் ஒருவர் பனைமரங்களை நட்டுவைத்தார். ஆனால், அவை யாவும் ஆண் மரங்களாக இருந்ததால் காய்க்காமல் போயின. பின்னர் அவ்வூருக்கு வந்த திருஞான சம்பந்தர், ‘பூர்த்தேர்ந் தாயென’ எனும் பதிகம் பாடி சிவபெருமானைத் துதிக்க, ஆண் பனைகள் பெண் பனைகளாகி பூத்துக் காய்த்துக் கனிந்து கனிகளை உதிர்த்தன என்கிறது தல வரலாறு.

* `கூந்தற்பனை’ என்றொரு வகை உண்டு. இதன் பாளைகள் பெண்களின் கூந்தலைப் போன்று சடை சடையாகத் தொங்குமாம். பார்ப்பதற்கு மிக அழகான இந்தப் பாளைகளைத் தோரணம்கட்டப் பயன்படுத்துவார்கள்.

* `தாடகை’ என்பதும் பனைவகைகளில் ஒன்று. தென் மாவட்டங்களில் இவ்வகைப் பனை அதிகம் உண்டு. தெய்வாம்சம் மிகுந்ததாகக் கருதப்பட்ட இந்த மரத்தின் பெயரை பெண்பிள்ளைகளுக்குச் சூட்டும் வழக்கமும் உண்டாம். ராவணனின் சகோதரிக்கு, `தாடகை’ என்று பெயர். தாடகை மரங்கள் நிறைந்த தாடகை மலையில் பிறந்து வளர்ந்ததால், அவளுக்கு `தாடகை’ என்று பெயர் வந்ததாகத் தகவல் உண்டு.

திருப்பனந்தாள் எனும் ஊர் பிரசித்திப்பெற்ற சிவத்தலம். இங்கே பனங்காட்டின் மத்தியில் அமைந்த சிவாலயம், `தாடகேச்சுவரம்’ எனச் சிறப்பிக்கப்பட்டது. இங்கே சிவனாரை வழிபட்ட தாடகை என்ற பெண்ணுக்காக, அவள் சூடிய மாலையை சிவனார் தலைகுனிந்து ஏற்றதாக திருக்கதை உண்டு. அவரே, பிற்காலத்தில் குங்கிலியக்கலய நாயனாரின் பக்தியை ஏற்று தலைநிமிர்ந்தாராம்.

சரி! திருக்கார்த்திகையில் பனைக்கு என்ன சிறப்பு?

தீபத்திருவிழாவன்று அதிகாலையில் கோயிலில் பரணி தீபம் ஏற்றி வழிபடுவார்கள். மாலை வேளையில் மலை முகடுகளிலும் கோயில் கோபுரங்களிலும் மகா தீபம் ஏற்றுவார்கள். வீடுகளில் அகல் விளக்குகளும், மாவிளக்கு தீபமும் ஏற்றி வழிபடுவார்கள். இதேபோல் வேறொரு வழிபாடும் உண்டு. அதுதான் `சொக்கப்பனை வைபவம்’.

சகல ஆலயங்களிலும் சொக்கப்பனை வைபவம் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படும். ‘குறிப்பாக உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் வைக்கப்படும் சொக்கப்பனை தமிழகத்திலேயே பிரமாண்டமானது’ என்கிறார், சிவபக்தரும் உவரி திருக்கோயில் ராஜகோபுரத் திருப்பணிக் கமிட்டியின் தலைவருமான ஜி.டி.முருகேசன். அவரே தொடர்ந்து சொக்கப்பனை வைபவத்தின் சிறப்புகளையும், தாத்பரியத்தையும் விவரித்தார். ‘‘பெரிய புராணத்தில் அற்புதமான பாடல் உண்டு.

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணாய

நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்

நாணாது மேடிய மால் நான்முகனும் காண நடுச்சேணாலும்

தழல் பிழம்பாய் தோன்றியது தெளிந்தார்...

இதுதான் அந்தப் பாடல்.

திருமாலும் பிரம்மனுமே அடிமுடி தேடிக் கண்டடைய முடியாத வண்ணம், நெருப்புத் தழலாகக் காட்சியளித்த பரமேஸ்வரனை அக்னிமயலிங்கமாக வழிபடுவதே சொக்கப்பனையின் தாத்பரியமாகும்.

திருக்கார்த்திகை தினத்தில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக்கூம்பின் முன் ஸ்வாமி எழுந்தருள்வார். சில கோயில்களில் அம்பாளும் ஸ்வாமியும் எழுந்தருள்வார்கள். சில கோயில்களில் பஞ்சமூர்த்திகள் (விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர்) எழுந்தருள்வார்கள். அவர்களுக்கு தீபாராதனை முடிந்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும்.

கொழுந்துவிட்டு எரியும் அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி வழிபடுவார்கள். சுமார் முப்பது, முப்பத்தைந்து அடி உயரத்துக்கு (முழுப் பனையையே சொக்கப்பனைக்குப் பயன்படுத்துவார்களாம்) அமைக்கப்படும் சொக்கப்பனை எங்கள் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலின் தனிச்சிறப்பு’’ என்றார் அவர்.

சில ஊர்களில், சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக, காப்பாக பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயற்காடுகளிலும் தூவுவார்கள். இதனால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

பனை ஓலைக் கொழுக்கட்டை!

தீபம், சொக்கப்பனை மட்டுமல்ல... கொழுக்கட்டை பிரசாதமும் திருக்கார்த்திகை ஸ்பெஷல்தான். அதிலும் தென் தமிழகத்தின் பனை ஓலைக் கொழுக்கட்டை மிகவும் பிரசித்திப்பெற்றது!

பச்சரிசி மாவுடன், பாசிப்பயறு, வெல்லம் அல்லது கருப்பட்டி, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து, இந்தக் கலவையைப் பனை ஓலையில் பொதிந்து, அவித்துச் செய்யப்படும் பனை ஓலைக் கொழுக்கட்டைக்கு இணையேதும் இல்லை எனலாம்.

No comments:

Post a Comment