www.asiriyar.net

Friday 2 February 2018

பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம் : முறைகேடின்றி மதிப்பெண் தர உத்தரவு

அரசு பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், பிளஸ் 2வுக்கான, செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கின. பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மார்ச்சில் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. 

பிளஸ் 2வுக்கு, மார்ச், 1; பிளஸ் 1க்கு, மார்ச், 7; 10ம் வகுப்புக்கு, மார்ச், 16லும் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2வுக்கான செய்முறை தேர்வு நேற்று துவங்கியது. கணிதம், அறிவியல், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, பள்ளி ஆய்வகங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன. பல பள்ளிகளில் பெயரளவில், செய்முறை தேர்வு நடத்துவது வழக்கமாக உள்ளது.


 சில பள்ளிகளின் ஆய்வகங்களில், உபகரணங்கள் பெயரளவில் தான் உள்ளன. இந்த முறை, அனைத்து பள்ளிகளிலும், உபகரணங்களை முறையாக வாங்கி பயன்படுத்த வேண்டும். அவற்றை, மாணவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கி, செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.


இந்த தேர்வில், மாணவர்களுக்கு தோராய மதிப்பெண் வழங்காமல், சரியான மதிப்பெண் வழங்க வேண்டும். தங்களுக்கு பணிவிடை செய்யும் மாணவர்களுக்கு மட்டும், ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் வழங்குவது போன்ற முறைகேடுகள் இருக்கக் கூடாது என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. செய்முறை தேர்வுகளை, வரும், 13ம் தேதிக்குள் முடிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. 

தனித்தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தனித்தேர்வர்களுக்கும், எந்தவித பாகுபாடுமின்றி, பள்ளி மாணவர்களை போன்றே தேர்வை நடத்தி, அவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment