www.asiriyar.net

Friday 9 February 2018

பிள்ளை போல மாணவரை நேசியுங்கள்! : ஆசிரியர்களுக்கு செங்கோட்டையன் அறிவுரை

''பள்ளி ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களை, பெற்ற குழந்தையை விட, மேலாக நேசிக்கும் நிலை வர வேண்டும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

முயற்சி : சென்னையில், நேற்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே ஒழுக்கமும், உயர்ந்த பண்பும் வளர, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.இளம் வயதிலான மாணவர்களை நல்வழிப்படுத்த, நல்லொழுக்க கல்வி வர உள்ளது.

உயர்ந்த போதனைகளும், யோகா மற்றும் விளையாட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.பாடத்திட்டம் இல்லாமல், நீதிபோதனை வகுப்பு தனியாக எடுக்கப்படும். இதற்கான புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில், அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவு பெற்று, செயல்பாட்டுக்கு வரும்.

 நெகிழ்ச்சி : ஆசிரியர்கள், மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை, நானும், பள்ளிக் கல்வி செயலர், பிரதீப் யாதவும், பிரிட்டன் சென்றிருந்த போது, நேரில் கண்டு நெகிழ்ச்சி அடைந்தோம். அங்குள்ள பள்ளிகளில், மாணவர்கள், மாற்று திறனாளி குழந்தைகள், சிறப்பு குழந்தைகள் என அனைவரிடமும், ஆசிரியர்கள், மிகநேசமாக பழகுகின்றனர்.

அவர்களின் இளம் வயது செயல்களை பொறுத்து கொண்டு, அவர்களை தங்கள் குழந்தைகளை விட மேலாக, அன்பு செலுத்தி, நல்வழிப்படுத்துகின்றனர். இதைபார்த்து, எங்களை போன்று, வெளிநாடுகளில் இருந்து சென்றவர்கள் நெகிழ்ந்து போனோம். அதேபோன்று, இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும், மாணவர்களை, ஆசிரியர்கள் தங்கள் குழந்தைக்கும் மேலாக, பாசத்துடன்வழிநடத்தும் நிலை வர வேண்டும் என்பதே, அனைவரது விருப்பம்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment